செவ்வாய், 12 ஜூலை, 2011

sakkalaththi

      சக்களத்தி              ( முத்து ரத்தினம் )
                                                              -----------------      
                              
                            வினோதகன்   அலுவலகத்தில்  இருந்து கிளம்பும் போது  மணி ஒன்பது . இவனுக்கு      மட்டும்  ஏதாவது ஒரு  வேலையை  தலையில் கட்டிவிடும் மேனஜரின்  உத்தரவுக்குத்  தட்ட
    முடியாத நிலை.
 
                       நேரே  ஸ்வீட் கடைக்குச் சென்று , திருநெல்வேலி அல்வா அரை கிலோ இரண்டு பாக்கெட்டுகளும் , மைசூர் பாகு  மற்றும் காரம் இரண்டிரண்டு  பாக்கெட்டுகளாகவும்  கட்டச் செய்தான் .
  
                          பூக்கடைக்குச் சென்று இரண்டிரண்டு முழமாக , நான்கு முழம்  மல்லிகைப் பூவும் வாங்கிக் கொண்டான் . பக்கத்துக்கு ஓட்டலில்  டிபனும் முடித்துக் கொண்டான் .
 
                         எதற்கு இரண்டு பாக்கெட்டுகளாக வாங்குகிறான் என யோசிக்கிறிர்களா ? சற்று பொறுங்கள் .!
 
            ஆறு வருடங்களுக்கு முன் மேட்டுரிலுள்ள  கெமிகல்ஸ் கம்பெனியில் கிளார்க்காக வேலைக்குச்  சேர்ந்தான் , வினோதகன் .
 
            ஒரு வருடத்திலேயே பணி நிரந்தரம் செய்தது , அவன் கம்பெனி . இதற்கு விநோதகனின்
  சுறுசுறுப்பும் , தான் உண்டு  தன் வேலை உண்டு  என இருப்பதும் ஒரு காரணம் .
 
           வீட்டிலும் கல்யாணப் பேச்சை எடுத்தார்கள் . விமலாவும் நல்ல நேரம் பார்த்து , வலது காலை
    எடுத்து வைத்து , வினோதகன் வீட்டுக்குள்  வந்தாள், முதல் மனைவியாக .
 
                  தேனிலவுக்கு  ஏற்காடு  சென்றார்கள் . உல்லாசமாகதான்  பொழுதுகள்  கழிந்தன .
           ஆச்சு , ஒரு வருடம்  , இரண்டு வருடம்  என ஐந்து  வருடங்கள் கழிந்தன. 
                  ஆனால் , வீட்டில்  ஒரு மழலைச் சத்தம் தான்  கேட்க  முடியவில்லை .
 
               விமலாவுக்கு  வீட்டில் மரியாதை குறைய  ஆரம்பித்தது .
 
                 இத்தனைக்கும் அவள்  மாமியார் , மாமனாருக்கோ எந்த குறையும் வைக்கவில்லை. 
   கணவனிடமும்  அன்பாகத் தான் பழகினாள் . ஆண்டவன்  சோதனையோ  என்னவோ ?!
 
          டாக்டர்களிடமும்  இருவரும் சோதித்தார்கள் .  இருவரிடமும்  எந்த குறையும்  இருப்பதாகத் 
  தெரியவில்லை. 
 
           ஆனால் , கிழடுகள்  பொறுக்க வேண்டுமே !
  மெதுவாக  விநோதகனிடம்  மறு கல்யாணப் பேச்சை ஆரம்பித்தனர் , பெற்றோர் .
  உறவினர்களும்  ஆமோதித்தனர் .
 
           வி஦#183யம்  மெல்ல விமலாவின்  பெற்றோருக்கு தெரிய வந்தது . விமலா பெற்றோரிடம் 
   அழுது  புலம்பினாள் . தமது  பெண்ணின்  வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே  என கவலைப் பட்டார்கள் .
    கணவனிடம்  விமலா  வேண்டினாள், சிறிது காலம்  பொறுங்கள் -என்று .
 
       விநோதகனின் பெற்றோர்  உறவினரிடம்  எல்லாம்  சொல்லி பெண்  தேட  ஆரம்பித்தனர். 
  விநோதகனால் ஏதும் மறுக்கமுடியாத  நிலை .பெற்றோரின்  சொல்லுக்கு கட்டுப்பட்டு  வளர்ந்தவன் .
 
             அன்று இரவு  விமலாவை அணைத்தபடி  வினோதகன் ஒரு ஐடியா  கொடுத்தான் .
 
      அதாவது  விமலாவின்  தங்கை சுமதியை , வினோதகன் இரண்டாவது மனைவியாக 
 கல்யாணம் செய்வது .
 
                 ஏனென்றால்   சகோதரிகளுக்குள்  எந்த விதமான பிரச்னைகளும்  வர வாய்ப்பில்லை .
 
              சுமதிக்கும்  வரதட்சனை இல்லாமல்  கல்யாணம்  முடிந்தமாதிரி  இருக்கும் .
   சொந்தத்துக்குள்  சொந்தம் .
 
          இதற்கு ஒரு வழியாக  விமலா   சம்மதித்தாள் . 
 
             வேறு  எவளாவது ,  சக்களத்தியாக வந்தால் , தன் கணவனின் மனதை மாற்றி விட்டால் 
  தன் நிலைமை  அதோ  கதி ஆகி விடும் என நினைத்தாள். 
 
          தன் தங்கையே  சக்களத்தியாக  வந்தால்  தனக்கு கட்டுப்பட்டு  இருப்பாள்  ,  என தப்புக் 
    கணக்கு  போட்டு விட்டாள் , விமலா .
 
          விமலாவின் பெற்றோர்  சம்மதத்துடன்   ஒரு நல்ல நாளில்  வலது காலை  எடுத்து 
   வைத்து  விநோதகனின்  வீட்டுக்குள்  சுமதி வந்தாள் , இரண்டாவது  மனைவியாக !.
 
           கொஞ்ச நாட்கள்  அக்கா , தங்கை  பாசத்துடன்  குடும்பம்  நடந்தது .
 
                புது மனைவி  மோகத்தில்  , வினோதகன் சுமதி இருக்கும் அறைக்குள்  நுழைந்தால் 
  கோபத்துடன்  பொருமுவாள் , விமலா .
 
          இது  சுமதிக்கு , கொஞ்சம்  கூடப்  பிடிப்பதில்லை .  சிறிது  நாட்களில்  அக்கா , தங்கைக்குள்,
  மன்னிக்கவும் , சக்களத்திகளுக்குள்  சண்டை சச்சரவு  அதிகமாகிவிட்டது .
 
            இன்று  இரவு  ஒரு முடிவோடு தான் வினோதகன் அலுவலகத்திலிருந்து இரண்டு
   பாக்கெட்டுகளுடன்  வந்தான் .
 
                 மணி இரவு பத்து ஆகி விட்டிருந்தது .
       வீடு திறந்தே இருந்தது . மெதுவாக  விமலாவின் அறைக்குள்  நுழைந்தான் ,வினோதகன் .
 
              இவனுக்கு முதுகு காட்டிக் கொண்டு திரும்பி  படுத்திருந்தாள் ,விமலா .
  பக்கத்தில்  நெருங்கி அவளைத் தொட்டான் . எந்த அசைவுமில்லை.
 
          கொண்டு வந்திருந்த  ஒரு செட்  பார்சலை பக்கத்திலிருந்த மேசையில் வைத்து விட்டு
  சத்தம்  போடாமல் வெளியே  வந்து  சுமதி அறைக்குள் நுழைந்தான் .
 
         அவள் இவனை எதிர் பார்த்து  இருப்பாள் போலும் ! தொட்டவுடன் எழுந்து  அமர்ந்து
  கொண்டாள்.
 
            இவன் கையால் சுமதிக்கு அல்வா ஊட்டி விட்டான் . தலையில் பூச்சூடினான் .
  பிறகு  அவளை அனைத்துக் கொண்டான் .
 
          அந்த  சமயத்தில்  தான் கதவருகில்  விமலாவின்  விசும்பல் சத்தம்  கேட்டது .
 
            "  எனக்கு வயசாகி  விட்டது . அது தான் இளசைத் தேடித் போறிங்க . நான் பார்க்காத
  அல்வாவா ?  ஒரு நாளைக்காவது எனக்கு ஊட்டி விட்டிருப்பிங்களா ?"
 
              வினோதகன்  சப்த நாடியும் ஒடுங்கிப் போய் விட்டான் .
 
           " தெரியுதில்லே , உனக்கு வயசாகி விட்டது . பேசாமல் ஒரு மூலையில் கிடக்க
   வேண்டியது தானே ! எங்களை  ஏன் தொந்தரவு செய்கிறாய் ?"- சுமதி
 
             " ஏண்டி  சக்களத்தி !  நான் பார்த்து உனக்கு வாழ்வு கொடுத்தால்  என்னையே
   தூக்கி  எறிந்து  பேசுகிறாயே , உனக்கு என்ன தைரியமடி " -விமலா  சுமதியை
  அடிக்கப் போய் விட்டாள் .
 
            சுமதியும் பதிலுக்கு கையை  ஓங்கினாள் .
  வினோதகன் இருவருக்கும் இடையில் .
 
             சிறிது நேர சண்டைக்குப் பிறகு விமலாவும் , சுமதியும் ஓய்ந்து போனார்கள் .
 
         விடிய விடிய , தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான் , வினோதகன் .
 
   " ஆமாம்! அவனுக்கு எப்போது  குழந்தை பிறக்கும் ?"
   
                            உங்களுக்குத் தெரியுமா ?
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக